தமிழ்நாட்டு மக்களை திரையில் கவர்ந்தால் போதும், நாம்தான் அடுத்த முதலமைச்சர் என்று எண்ணி அரசியலுக்கு வந்தவர்கள் வரிசையில் புதுவரவாக தவெக தலைவர் நடிகர் விஜய் விளங்கி வருகிறார்.
கருத்தியல் முரண்தான், அரசியல் முரண் என்பதைகூட உணராத விஜய், கருத்தியல் எதிரி, அரசியல் எதிரி என திரை வசனங்களை முன்வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்க முற்பட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, ரசிகர் பட்டாளங்களை கூட்டி ஓரிரு கூட்டங்களை அரங்கேற்றினார். உண்மையான அரசியல் பேச்சுகள், ஆக்கப்பூர்வமான கருத்துகள் வெளிப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழக்க நேரிட்டது.
இச்செய்தி அறிந்து, உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்து அமைச்சர்களும் அனைத்துக்கட்சித் தலைவர்களும் உடனடியாக சென்று மக்களின் துயரில் பங்கெடுத்தபோது, கரூரில் இருந்து அவசர அவசரமாக சென்னைக்கே ஓடிப் போனார் விஜய். தவெக கட்சிக்காரர்களும் காணாமல் போய் இருந்தனர்.
இந்நிலையில், 3 நாட்கள் கழித்து, நடந்த விபத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்பதுபோன்ற ஒரு பேச்சை காணொளி வழி வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய். அதிலும் குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில், தனது பேச்சை முன்வைத்திருக்கிறார். கரூர் துயர சம்பவத்திற்கு கிஞ்சித்தும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி பஞ்ச் டயலாக் பேசி இருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது.
முதல்வரை பார்த்து கேள்வி எழுப்புகிறார். பழிவாங்கும் எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறார், விஜய். இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் தன்மையை போன்ற ஒன்றுதான். 41 உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், அதனை அரசியலாக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
தவெக தொண்டர்கள் உயிரிழப்பை கடந்து, திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்துகிறார். உயிரிழப்பு வலியுடன் தனது வீடியோ பேச்சை விஜய் நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் சினிமா பாணியில் திமுகவை சீண்டுகிறார். இது பொறுப்பற்ற பேச்சல்லவா? இப்படி பேச வேண்டிய நேரமா இது?
கரூர் உயிரிழப்புக்கு முதற்காரணம் விஜய் தான் என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும் பிரபல நாளிதழ்களும் ஊடகங்களும் படம்பிடித்து காட்டிய பிறகும் விஜயால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது?. இது, தான் பேசிய கூட்டத்தில் மடிந்த அப்பாவிகளின் உடல்கள் மீதேறி அரசியல் லாபம் ஈட்டும் முயற்சியன்றி வேறென்ன?
இதற்கு முன்பு திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சிலர், பெருமளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் கருத்தியல் தெளிவின்மை, கட்டமைப்பு தோல்வி ஆகிய காரணங்களால் பிற்காலத்தில் அரசியல் களத்திலிருந்து காணாமல் போக நேரிட்டது என்பதை விஜய் இன்னுமா புரிந்து கொள்ளவில்லை?
விஜய், தனது அரசியல் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்!



