கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு கடலூர் அருகே சிங்காரத் தோப்பு, அக்கரைக்கோரியில் நாவல் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் முஜிபுர்ரகுமான் மாவட்ட வன அலுவலர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இது பற்றி கலெக்டர் கூறியதாவது:- ஆண்டுதோறும் செப்டம்பர் 24ஆம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் முக்கிய நோக்கமாக தமிழ் நாட்டில் தற்போது பசுமை பரப்பு 23.08 சதவீதமாக உள்ளது. ஆகவே காடுகள் மற்றும் மரங்களுடன் கூடிய பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்தில் நகர்புறங்களில் பசுமை பரப்பை ஏற்படுத்துதல், பண்ணை நிலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பினை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நாவல் மரங்களை போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்
வனத்துறையின் மூலம் நாவல் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடும் பணிக்காக துறை வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்தாண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்குள் 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழாவில் வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி, அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



