சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழகம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் சார்பில் சர்வதேச கடலோர பகுதிகளை தூய்மைபடுத்தும் தினம் நேற்று நடைபெற்றது.
தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நிதி உதவியுடன், அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் மற்றும் சுற்றுச் சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம், மத்திய வன மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்துடன் இணைந்து இந்த தூய்மை பணி நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி தலைமையில் சர்வதேச தூய்மை தின உறுதி மொழி ஏற்கப்பட்டு,தூய்மை பணியை கொடி யசைத்து துவக்கி வைத்தார். தேவையான உபகரணங்களை புல முதல்வர் ஸ்ரீராம் அனைவருக்கும் வழங்கினார்.
கடற்கரையில் சுமார் 2000 கிலோ மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே தூய்மை பணி மூலம் சேகரித்தனர். இதில் சாமியார் பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் சங்கர், தூய்மை பணியாளர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் ராமநாதன்,திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், முனைவர் தெய்வசிகாமணி,தேசிய மாணவ கடற்படை கேப்டன் விஜயானந்த், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், ரங்கராஜ் மற்றும் வசந்தன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.



