கோவை டவுன் ஹாலில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இது குறித்து பூம்புகார் மேலாளர் மாலதி கூறியதாவது:- கோவை பூம்புகாரில் ஆண்டுதோறும் நடைபெறும் கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா வழக்கம் போல் இந்த ஆண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை அடுத்த மாதம் (அக்டோபர்) 4ம் தேதி முடிய ஒரு மாதம் நடக்கிறது
இந்த வருட புதிய வரவாக மதுரை வீரன், கள்ளழகர், சோட்டானிக்கரை பகவதி அம்மன், குழந்தை குருவாயூரப்பன். திருச்செந்தூர் முருகன், வைரமுடி பெருமாள், மயில் வாகனத்தில் ஆறுமுக முருகன், பிரதோஷ சிவன், மூன்று அடியில் முருகன் குடும்பம், ஹரிகரன், ஆண்டாள் செல்ல பிள்ளை, கும்பகோணம் ராமசாமி செட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் பல விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.
இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.75 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.



