fbpx
Homeபிற செய்திகள்குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அரசியல் கணக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அரசியல் கணக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். மகாராஷ்டிரா ஆளுநராக செயல்பட்டு வந்த நிலையில், அவரை வேட்பாளராக அறிவித்தது பேசுபொருளானது.


இந்த அறிவிப்புக்குப் பின்னணியில் பாஜகவின் தேர்தல் அரசியல் கணக்கு இருப்பதாகப் பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.


கூடவே, தமிழரான அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. திமுகவுக்கு செக் வைப்பதற்காக பாஜக எடுத்த நகர்வாகவே இது பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தான் பொருத்தமான வேட்பாளர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்தாலும், சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகும்.
இதே கணக்கு ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கும் பொருந்தும். இது இந்தியா கூட்டணி சார்பாக பாஜகவுக்கு வைக்கப்பட்ட செக் என்று பார்க்கப்படுகிறது.


இது ஒருபுறமிருக்க, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்றத்தில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு சபைகளில் மொத்தமாக 782 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு உறுப்பினருக்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவையாக உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் பாஜக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனின் கைகளே ஓங்கி இருக்கிறது.


பாஜக கூட்டணியில் மொத்தமாக 423 எம்பி-க்கள் ஆதரவாக இருக்கின்றனர். மக்களவையில் 293 எம்பிக்களும், ராஜ்ய சபாவில் 130 எம்பிக்களும் இருக்கின்றனர். இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.


போட்டி முக்கியம்; வெற்றியா, தோல்வியா? என்பது முக்கியமல்ல-& இது இந்தியா கூட்டணியின் அரசியல் பார்வை. ஆளுங்கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் போது எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துவது அவசியமானது தான்.
தேர்தல் என்றால் அது யாரைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும் அதில் போட்டி இருந்தால் தான் அது ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


இந்த தேர்தலில் அரசியல் நகர்வுகள் இருக்கலாம். கூட்டல் & கழித்தல், லாப& நஷ்ட கணக்குகள் இருக்கலாம். ஆனாலும் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகப் போவது தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியலைத் தாண்டி மகிழ்ச்சி தரக்கூடியதே.


அட்வான்ஸ் வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img