நிலையான விமான எரிபொருள் விநியோகத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கையெழுத்திட்டன. இது இந்திய விமானப் போக்கு வரத்தை பசுமை பாதைக்கு கொண்டு செல்லும் முக்கியமான படியாகும்.
பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில், நிலையான விமான எரிபொருள் தயாரிப்பிற்காக சர்வதேச தரச் சான்றிதழ் (ஐ.எஸ்.சி.சி-கார்சியா) பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை இந்தியன் ஆயில் பெற்றுள்ளது. இந்தச் சான்றிதழ், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் மிகக் கடுமை யான உலகளாவிய தர நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் திறனை உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தத்தில், இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநர் சைலேஷ் தார் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் பாலாஜி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வுக்கு இந்தியன் ஆயில் தலைவர் ஏ.எஸ்.சாஹ்னி மற்றும் ஏர் இந்தியா தலைமை அதிகாரி கேம்பல் வில்சன் முன்னிலை வகித்தனர்.
“இந்த ஒப்பந்தம் ஏர் இந்தியாவுடன் கையெழுத்தானது, நாட்டின் பசுமை விமானப் போக்குவரத்துக்கான மாற்றத்துக்கான முதல் படியாகும். பானிபட் சுத்தரிப்பு நிலையத்தில் இருந்து இந்த விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
இந்த எரிபொருள்களை விமானங்கள் பயன்படுத் தும்போது, குறைந்த அளவு கார்பனைத்தான் விமானங்கள் வெளியிடுவதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
விமானப் போக்குவரத்துக்கான பசுமை எரிபொருள் பயன்பாடு கார்பன் வெளியீட்டை வெகுவாகக் குறைக்கும், என்கிறார் என்று இந்தியன் ஆயில் தலைவர் சாஹ்னி தெரிவித்தார்.
“2050-க்குள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் ‘பூஜ்ஜிய கார்பன் வெளியீடு’ இலக்கை அடைய இந்தியன் ஆயிலுடனான ஒந்த ஒப்பந்தம் உதவும்.
இது இந்திய அரசின் நிலையான வளர்ச்சி நோக்கத்திற்கும் ஆதரவாக அமைகிறது” என்று ஏர் இந்தியா தலைமை அதிகாரி வில்சன் கூறினார். இதன் மூலம் சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு மேலும் வலுப்பெற உள்ளது.



