தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கோவையில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் சாலை மற்றும் பாலங்களின் அடியில் தண்ணீர் தேங்குகிறது.
இது உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்படுகிறது. மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் வேகமெடுத்துள்ளது.
அதற்கான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை விரைவாக வெளி யேற்றும் வகையில், அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவையில் நேற்று பரவலாக பெய்த மழையால் கிக்கானி பள்ளி அருகில், காளீஸ்வரா மில் சாலை, அவினாசி மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனை ஊழியர்கள் மூலமாக அகற்றும் பணிகள் இன்று நடந்தது.
இந்த பணிகளை மாநகராட்சி சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழைநீர், சாலைகளில் படிந்துள்ள மண் மற்றும் குப்பைகளை விரைவாக அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, திருச்சி சாலை ராமநாதபுரம் சாவித்திரி நகர் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டார். குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் அறுவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் பலர் இருந்தனர்.



