கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 31வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது.
துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் வரவேற்றார். மிசோராம் மாநிலத்தின் முதல்மந்திரி லால்டுகோமா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நடத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “குறிக்கோள் இல்லாத வாழ்வு அர்த்தமற்றது. உங்கள் குறிக்கோளை கண்டுபிடியுங்கள் அது உங்கள் லட்சியங்களை வடிவமைக்கும். உலகிற்கு பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மேலாளர்கள் தேவை, ஆனால் அதை விட கருணை, இரக்கம் மற்றும் ஒருமனப்பாடு கொண்டவர்கள் முக்கியமாக தேவை” என்றார்.
காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி தங்களின் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதாவது:
காருண்யாவில் படித்து வெற்றிகரமான பட்டங்களை பெற்ற உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இம்மகிழ்ச்சியான தருணத்தில் நீங்கள் காருண்யாவில் சிறந்த கல்வியோடு நீங்கள் பெற்றுக்கொண்ட நற்குணங்களை தொடர்ந்து உங்கள் வாழ்வில் கடைபிடித்து, வாழ்ந்து காட்டி சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு உங்கள் தொழில் நுட்ப அறிவின் மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களின் சமூக பொறுப்பின் வெளிப்பாடாக பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நிதி வழங்கினர்.
முன்னதாக, மிசோராம் மாநிலத்தின் முதல்மந்திரி லால்துகோமாவின் தலைமைத்துவத்தையும், சேவைகளையும் பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.



