டிராகன் விண்கலம் பூமியை சுற்றி 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு நேற்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா படைத்தார்.
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான அவர், ஆக்ஸியம்- 4 விண்வெளி திட்டத்தில் இடம் பெற்ற 4 விண்வெளி வீரர்களில் ஒருவராக உள்ளார். இத்திட்டத்தில் சுபான்ஷு சுக்லா விண்கலத்தின் விமானியாக உள்ளார்.
இந்த பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்தார். இதற்கு முன், 1984ல் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது, சோவியத் யூனியனின் விண்கலம் மூலம் இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றார்.
தற்போது நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆக்ஸியம் 4 திட்டத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இணைவதற்கு ரூ.548 கோடியை நமது பிரதமர் செலவழித்திருக்கிறார்.
2027 ல் விண்வெளிக்கு இந்தியாவே வீரர்களை அனுப்பும் சுகன்யான் திடடத்திற்கு ரூ.20,000 கோடியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல 2023&ல் இந்திய விண்வெளிக் கொள்கையை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை உலக நாடுகளே வியக்கும் வகையில் அதிவேகத்தில் பிரதமர் மோடி முன்னெடுத்து வருவது அவரது சாதனைகளில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆக்ஸியம் -4 திட்டத்தின் 4 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் விவசாயம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் இஸ்ரோவின் விண்வெளி உயிரியல் மற்றும் விண்வெளி விவசாய ஆராய்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்து மைல்கல் சாதனை படைத்ததோடு, சுகன்யான் திட்டத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து தந்துள்ளார் சுபான்ஷு சுக்லா. முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா நுழையும் நிகழ்வை இந்தியாவே பெருமையுடன் பார்த்தது. அவர் விண்வெளி பயணத்தைத் தொடங்கியபோது ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என முழக்கமிட்டார். அந்த முழக்கம் இந்தியா முழுவதும் மகிழ்ச்சியான உணர்வை பரப்பி உள்ளது. அவரை இந்தியத் திருநாடே போற்றி வாழ்த்துகிறது.
சுபான்ஷு சுக்லா அவர்களே, 14 நாள் விண்வெளி ஆராய்ச்சியை முடித்து வெற்றியுடன் திரும்பி வாருங்கள் – ராயல் சல்யூட் அடித்து வரவேற்க காத்திருக்கிறோம்!



