கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன் (33). இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் எஸ்ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார். மேலும் கோவை மாநகர போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்பு படையில் இருந்து வருகிறார்.
தனபாலன் இதுவரை 55 போதை பொருள் வழக்கு களில்169 குற்றவாளிகளை கைது செய்துள்ளார். அவர் களிடமிருந்து 161 கிலோ கஞ்சா மற்றும் 77 கிராம் மெத்தபெட்டமையின் எனப்படும் போதை பொருள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளார். குற்ற வாளிகளிடம் இருந்து 29 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கார்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
இவரின் அதிரடி நடவடிக்கையால் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து தனபாலனுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதினை அவர் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையால் பெற உள்ளார்.
தமிழ்நாட்டில் 15 போலீஸ் அதிகாரிகளில் கோவை மாநகரில் விருது பெரும் ஒரே ஒரு எஸ்ஐ தனபாலன் ஆவார். அவரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.



