கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கடந்த 4 ஆண்டில் 1,90,475 விவசாயிகளுக்கு ரூ.1661.22 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன்காக்க எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக விவசாயிகளுக்கு வேளாண் பயிர் சாகுபடிக்காக இடு பொருட்கள் மற்றும் தேவையான உரங்கள் வாங்குவதற்காக கூட்டுறவுத்துறையின் சார்பில் குறுகிய கால பயிர்கடன் மற்றும் கால்நடைப் பராமரிப்பு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 85 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீடு ரூ.1099 கோடியில், தற்பொழுது 1,34,957 விவசாயிகளுக்கு ரூ.1138.36 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கடன் தொகைகள் அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனை விவசாயிகள் உரிய தவணைத் தேதியில் திருப்பி செலுத்தும் பொழுது விவசாயிகள் வட்டி செலுத்தத் தேவையில்லை என்பதும், இதற்குண்டான வட்டியை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.482.2 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 55,518 விவசாயிகளுக்கு ரூ.522.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,34,957 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.1138.36 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 55,518 விவசாயிகளுக்கு ரூ.522.86 கோடி கடன் என மொத்தம் இந்த இரண்டு வகையான திட்டங்களின் மூலம் 1,90,475 விவசாயிகளுக்கு ரூ.1661.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க் கடன் மற்றும் இதர கடன்கள் பெற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் மாவட்டம், இனுங்கூர் பகுதியைச் சேர்ந்த சு.பிச்சை கூறியதாவது:
எனக்கு 50 வயதாகிறது. எங்களுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நான் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு இனுங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தினை அணுகினேன்.

அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலர்கள் கடன் பெறுவதற்கான நடைமுறைகளைத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, நான் பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி இனுங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன்.
பிறகு, வேளாண்மைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு கடன் பெற விண்ணப்பம் அளித்தேன். எனது விண்ணப்பத்தினைப் பரிசீலனை செய்த அலுவலர்கள் எனக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1,58,000 கடனுதவி வழங்கினார்கள். இதன் மூலம் எனது விவசாய நிலத்தில் வாழை பயிர் சாகுபடி செய்துள்ளேன். அறுவடை முடிந்த பின் எனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் குறிப்பிட்ட கடன் தொகையினைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு திருப்பிச் செலுத்துவேன்.
நான் தற்பொழுது சமுதாயத்தில் யாருடைய உதவியும் இன்றி சுயமாக சம்பாதித்து பொருளாதார ரீதியாக எனது வாழ்வில் மேம்பட்டுள்ளேன். என்னைப் போன்ற சிறு, குறு விவசாயிகளின் வேளாண் பயிர் சாகுபடிக்கு வழிவகை செய்து கடனுதவிகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



