fbpx
Homeபிற செய்திகள்பெண்கள் தொழில்முனைவோராக இலவச ஆன்லைன் வணிக தளம்!

பெண்கள் தொழில்முனைவோராக இலவச ஆன்லைன் வணிக தளம்!

தென்காசி மாவட்ட கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்யேக ஆன்லைன் வணிக தளமாக ‘கொற்றவை’ உருவாக்கப்பட்டுள்ளது.


இம்மாவட்டத்தில் பெண்களுக்கு பீடி சுற்றுவது தான் பிரதான தொழிலாக உள்ளது. அதன்மூலம் உடல்நலக் குறைவு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, மாற்றுத் தொழில்களை பெண்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்ற அடிப்படையில், ஜோஹோ நிறுவனத்தால் ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


பீடி தொழிலாளிகள் மட்டுமின்றி தாய்மார்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் புரியும் பெண்கள் என அனைவருக்குமாக ‘கொற்றவை’ ஆன்லைன் விற்பனை தளம் இயங்கவுள்ளது

. கிராமப்புற பெண்கள் தங்களது கைவண்ணத்தில் உருவாக்கும் சிறு பரிசு பொருட்கள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுப் பொருட்கள் என தங்கள் படைப்புகள் அனைத்தையும், உலகம் முழுவதும் விற்பனை செய்ய ‘கொற்றவை’ மின்தளம் இலவச சேவை வழங்குவது தான் மிக முக்கியமானது.


கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ‘கொற்றவை’ மின் வணிக தளத்தை ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும் நாடறிந்த தொழிலதிபருமான ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார்.


பெண்களை தொழில் முனைவோராக்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இலவச சேவை தரும் வணிக தளத்தை உருவாக்கி முதல் விதையை தென்காசி மாவட்டத்தில் ஸ்ரீதர் வேம்பு ஊன்றி இருக்கிறார். அதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெண்கள் பீடி சுற்றுவதையே பிரதானமாகச் செய்து வருகின்றனர். அவர்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.


பெண்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற நோக்கத்திற்காக தென்காசி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றாலும் எல்லா பெண்களுக்கும் பொதுவாகவே அனைத்து மாவட்டங்களிலும் கொற்றவை போன்ற இலவச மின் தளங்களை எந்த பெயரில் வேண்டுமானாலும் உருவாக்கி செயல்படுத்தலாம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள பெரிய நிறுவனங்கள் தாமாக முன்வந்து இந்த சேவையை முன்னெடுத்துச் செய்யலாம்.


பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் தமிழ்நாடு அரசும் கொற்றவை போன்ற இலவச வணிக மின் தளங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவைப்படும் சலுகைகளை வழங்குவதன் மூலம் தனது பங்களிப்பை வழங்கலாம்.


பெண்களை தொழில் முனைவோர்களாக்கும் ஸ்ரீதர் வேம்புவின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img