மாணவர்கள் பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதிக்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் கூறினார்.
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அவர் 847 மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், `மாணவ மாணவிகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதி பெற வேண்டும். தங்களால் முடிந்த அளவிற்கு நாட்டிற்கும் தேவையான மக்களுக்கும் உதவ வேண்டும். தமிழக அரசின் நம்ம ஸ்கூல் திட்டம் சிறப்பானது. அதன் மூலம் தாங்கள் படித்த பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் முடிந்த அளவிற்கு உதவ வேண்டும்`என்றார்.
மேலும், தனது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியின் போது முக்கிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள்- மும்பை வெடிவிபத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன் பொருத்தியது, எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் தெரிந்து கொள்ள உதவும் வசதி, துப்புரவு தொழிலாளர்கள் கையால் சுத்தம் செய்வதற்கு நஷ்டஈடு ரூ.10 லட்சம் வரை, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு 4 சதமாக உயர்வு, மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் செல்ல சாய்தளம் அமைப்பது, எம்பி எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்துவதை அனுமதிப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாப்பது போன்ற மிக முக்கியமான வழக்குகளில் தான் அளித்த தீர்ப்பை குறிப்பிட்டார். அதே போன்று கேரள கவர்னராக இருந்தபோது கேரளாவில் இருந்த 13 பல்கலைக்கழகங்களில் மிகச் சிறப்பாக செயலாற்றும் பல்கலைக்கழகத்துக்கு ரூபாய் 5 கோடி பரிசு மற்றும் சிறந்த துறைகளுக்கான பரிசு என்று அறிவித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
கிராம புறத்திலிருந்து அரசுப் பள்ளியில் படித்து ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தான் ஒரு உயர்ந்த பதவிக்கு வந்த பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான பவானி காடப்பநல்லூரில் விவசாய தொழிலில் ஈடுபடுவதையும் அவர் குறிப்பிட்டார். எனவே மாணவர்களும் முடிந்த அளவிற்கு இந்த சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கல்லூரி தலைவர் வி சண்முகம், செயலாளர் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதல்வர்கள் மனோகரன் பத்மா உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



