fbpx
Homeபிற செய்திகள்கெஞ்சிய மாலத்தீவு மீது இரக்கம் காட்டிய இந்தியா!

கெஞ்சிய மாலத்தீவு மீது இரக்கம் காட்டிய இந்தியா!

இந்தியாவுக்கு மிக அருகே இருக்கும் தீவுக்கூட்டங்கள் அடங்கிய நாடு தான் மாலத்தீவு. இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையேயான உறவு என்பது அண்டை நாட்டுடனான உறவு என்பதையும் கடந்து, உணர்வுப்பூர்வமாக விளங்கி வந்தது.

சர்வதேச விவகாரங்களில் இந்தியா எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் மாலத்தீவு ஆதரவாக இருக்கும். அதேபோல, மாலத்தீவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒரு மூத்த சகோதரனை போல இந்தியா முந்திச்சென்று உதவும். ஆசியாவின் சூப்பர் பவராக ஆக துடிக்கும் சீனாவின் மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படாமல் இந்தியாவுடன் நெருக்கமான உறவை மாலத்தீவு பேணி வந்தது.

ஆனால், இந்த வரலாறு கடந்த ஆண்டுடன் முடிவடைந்தது. சீனாவின் நெருங்கிய ஆதரவாளரான முகமது முய்சு மாலத்தீவு அதிபரானது முதலாக இந்தியாவை விட்டு அந்நாடு விலக தொடங்கியது. மாலத்தீவின் கஷ்டக்காலங்களில் எவ்வளவோ உதவி செய்த பிரதமர் நரேந்திர மோடியையே கிண்டல் செய்யும் அளவுக்கு மாலத்தீவு அமைச்சர்கள் சென்றனர்.

மாலத்தீவின் இந்த திடீர் மமதையை கண்ட இந்தியர்கள், மாலத்தீவு சுற்றுலாவை முழுமையாக புறக்கணித்தனர். இதனால் கோபமடைந்த மாலத்தீவு, தங்கள் நாட்டில் உள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்றியது. சீன உளவுக் கப்பலை இந்தியாவுக்கு அருகே நிற்க அனுமதி அளித்தது.

இப்போது இந்திய ராணுவத்தினர் இல்லாமல், போர் விமானங்களை கூட இயக்க முடியாமல் அந்நாடு திணறுவது வேறு கதை. இதனிடையே, இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லாததால் அவர்களின் பொருளாதாரம் படுத்தே விட்டது.

இதனால் வேறு வழியின்றி இந்தியர்களிடம் சுற்றுலா வாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு மாலத்தீவு சென்றது. ஆனாலும், இந்தியாவிடம் இருந்து இதற்கு பதில் வராததால் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா ஜமீர், இந்திய வெளியுறவத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் கிண்டல் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்று கூறி மன்னிப்பு கேட்டார். மேலும், தற்போது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாலத்தீவுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த முறையும் மாலத்தீவை மன்னித்த இந்தியா, மாலத்தீவுக்கு 50 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.417 கோடியை வழங்கியுள்ளது.

சீனாவை குளிர்விப்பதற்காக இந்தியாவுக்கு எதிராக பல செயல்களில் மாலத்தீவு ஈடுபட்ட போதிலும், மாலத்தீவுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது இந்தியா. அந்நாட்டுக்கு இந்தியா கொடுத்துள்ள தொகையைப் பார்த்து சீனாவே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியை சற்றும் எதிர்பாராத மாலத்தீவு மக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பாசமிகு நட்பையும் பரந்த மனப்பான்மையையும் போற்றிப் பாதுகாக்கவே மாலத்தீவு மக்கள் விரும்புகிறார்கள். மாலத்தீவின் பொருளாதார நிலை உயர வேண்டுமானால் இந்தியாவின் உதவி இல்லாமல் அது நடக்காது என்பதை அந்நாட்டு அரசும் இப்போது புரிந்து கொண்டு விட்டது.

அழுது புலம்பிய மாலத்தீவுக்கு இந்தியா கருணை காட்டி இருக்கிறது. இனியாவது சுமுகமான உறவைப் பேணி, இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் மாலத்தீவு அரசு ஈடுபட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!

படிக்க வேண்டும்

spot_img