fbpx
Homeபிற செய்திகள்பெண் எம்.பி.க்கள் - பின்தங்கலாமா இந்தியா?

பெண் எம்.பி.க்கள் – பின்தங்கலாமா இந்தியா?

பெரிய பொருளாதார நாடுகளைப் பொறுத்தமட்டில், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியா கடைசி இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியாவின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14.4 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். இது மற்றப் பெரிய நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைவு.
மெக்சிகோ எம்.பி.க்களில் 48.2 சதவீதத்தினர் பெண்கள்.

அதுபோல், பிரான்ஸ் -39.7%, இத்தாலி – 35.7%, பிரிட்டன் – 32%, ஜெர்மனி – 30% என மேற்கண்ட நாடுகள் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பதில் இந்தியாவைக் காட்டிலும் மேலான நிலையில் உள்ளன.

சுவீடன், நார்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 சதவீதத்தினருக்கும் மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான பங்ளாதேஷ் எம்.பி.க்களில் 21 சதவீதத்தினர் பெண்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 23.6 சதவீதமாக இருக்கிறது.

ஜப்பான் மட்டுமே இந்தியாவைவிடப் பின்தங்கியுள்ளது. அந்நாட்டு எம்.பி.க்களில் 10 சதவீதத்தினர் தான் பெண்கள். வேட்பாளர்களை நிறுத்துவதில் ஆண் – பெண் பாகுபாடு காட்டுவதே நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக வேட்பாளர்களில் 12.6 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். அதுபோல், காங்கிரஸ் கட்சியிலும் 12.8 சதவீதத்தினர்தான் பெண் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அத்தேர்தலில் அதிகபட்சமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் 37.1% பெண் வேட்பாளர்களை நிறுத்தியது.

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தும் ஆட்சியாளர்கள், இடஒதுக்கீடு, ஆண் – பெண் சமநிலை, சம உரிமை என்றெல்லாம் முழக்கமிட்டால் மட்டும் போதாது. உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிக பெண் எம்பிக்கள் கொண்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்க வேண்டாமா?. அதற்கு ஒரேவழி மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பெரிய கட்சிகள் மட்டுமின்றி பெரிய மாநில கட்சிகளும் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களை களமிறக்க வேண்டும்.

இந்நிலையில், ஏழு கட்டங்களாக நடக்கத் தொடங்கி இருக்கும் 18வது நாடாளுமன்றத் பொதுத் தேர்தலிலும் பெரிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தத் தயங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே அமையப்போகும் 18வது நாடாளுமன்றத்திலும் பெண் பிரதிநிதித்துவத்தில் பெரிதும் மாற்றமிருக்க வாய்ப்பில்லை.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வரும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலாவது தங்கள் வேட்பாளர்கள் பட்டியலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தருவார்களா-?

படிக்க வேண்டும்

spot_img