கோடைக்காலம் தொடங்கிய நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை அலுவலர் கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மின்வாரிய, நகராட்சி, பேரூராட்சித்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமைவகித்து ஆட்சியர் பழனி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணி களை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை தினசரி உறுதி செய்திடும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் 14 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி குடியிருப்புப் பகுதிகளுக்குத் தேவையான 4.21 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம், திண்டிவனம்,
கோட்டக்குப்பம் நகராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சீரான அளவில் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் மின்தடை இல்லாமல் மின்விநியோகம் செய்ய மின்வாரிய அலுவலர்கள் மாற்று ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மே, ஜூன் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என கண்டறியப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டம் முன்னேற்பாடுகள் குறித்த வரைவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். மாற்று குடிநீர் ஆதாரம் இல்லையெனில், உடனடியாக குடிநீர் வழங்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், நகராட்சி ஆணையர்கள் ரமேஷ் (விழுப்புரம்), தமிழ்ச் செல்வி (திண்டிவனம்), புகேந்திரி (கோட்டக்குப்பம்), ஊராட்சிகள் உதவி இயக்குநர் விக்னேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.



