கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் 4 நாள் பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டி நேற்று துவங்கியது.
மத்திய அரசின் விளையாட்டு துறையின் முன்னெடுப்பான கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு துறையில் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக நடத்தப்படுகிறது. இப்போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டி கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இப்போட்டியை “ஆஸ்மிதா” அமைப்புடன் தமிழ்நாடு வுஷு அசோசியேஷன், கேபிஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகிறது. இதில் தென் மாநிலங்களிலிருந்து சுமார் 600 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து வுஷு அமைப்பின் தேசிய தலைவர் ஜித்தேந்திரா சிங் பஜ்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள்.
இப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.60 லட்சம். சமீபத்தில் சர்வதேச அளவில் வுஷு போட்டியில் வெற்றி பெற்ற ரோஷபினா தேவிக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது என்றார்.
இந்நிகழ்வின்போது, கேபிஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ராமசாமி, தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.



