கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பரிசோதனை முகாம் சாய்பாபா காலனியில் அமைந்துள்ள ஒன்கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் நடைபெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்களில் ஏற்கனவே கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட 60 குழந்தைகள் இந்த முகாமில் பங்கு பெற்றனர்.
ஒன் கேர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அப்துல்சலாம் தலைமையிலான மருத்துவர் குழு தேவையான பரிசோதனைகள் மூலம் குழந்தைகளை மதிப்பீடு செய்து, முகாமில் பங்கு பெற்ற குழந்தைகளில் 40 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் கோயம்புத்தூர் ரோட்டரி மெரிடியன் சங்கத்தின் பன்னாட்டு நிதி உதவியுடன் ‘’ஃபர்ஸ்ட் ஸ்டெப்’’ எனும் திட்டத்தின் கீழ், இலவசமாக செய்யப்பட இருக்கிறது.
இந்த முகாமிற்கான தொடக்க நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள், இளமுருகன், சிவகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் , ரோட்டரி மெரிடியன் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் ராமசாமி, சமூக சேவைகள் பிரிவின் தலைவர் தமிழ்ச்செல்வன், ரோட்டரி மெரிடியன் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கு பெற்றனர். முகாமினை கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் இயன்முறை மருத்துவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.



