டெல்லியில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு, அதனை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மோடி திறக்கக் கூடாது, குடியரசுத் தலைவரே திறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. விழாவை புறக்கணிப்பதென காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவித்து இருக்கின்றன.
நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது வேதனைக்குரியதே. இந்திய அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவர் என்பவர் நாடாளுமன்றத்தில் முதல் குடிமகன் என்ற வகையில் அங்கம் வகிக்கும் பெரிய தலைவர் அல்லவா-? இதனை யாராவது மறுக்க முடியுமா?
அதனால் தான் 19 கட்சிகள் ஒட்டுமொத்தமாக விழாவைப் புறக்கணிக்கவிருக்கின்றன.
எதிர்க்கட்சிகளே இல்லாமல் நாடாளுமன்றத்தை திறப்பது தான் ஜனநாயகமா? அது தேசிய அவமானம் தானே. பிரதமர் மோடியின் இந்த முடிவு ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
குடியரசுத் தலைவர் என்பவர், நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆவார். நாடாளுமன்றத்தில் முன்னுரை ஆற்றுபவர். நாடாளுமன்றத்தின் சட்டம் அமலுக்கு வருவதற்கு அவர் ஒப்பதல் அளிக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் குடியரசுத் தலைவர் இல்லையென்றால் நாடாளுமன்றம் இயங்க முடியாது. அப்படிப்பட்ட குடியரசுத்தலைவர் இல்லாமலே நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை தன் கையாலேயே திறந்து வைக்க பிரதமர் மோடி முடிவு செய்து விட்டார்.
நாட்டின் முதல் குடிமகனான பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவதில் நியாயம் இல்லாமலில்லை.
மக்களவையாக இருந்தாலும் மாநிலங்களவையாக இருந்தாலும் மாநில சட்டப்பேரவைகளாக இருந்தாலும் எதிர்க்கட்சி இல்லையென்றால் ஜனநாயகம் தழைக்காது.
உலக அரங்கில் பெரும் சாதனையாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் மோடி, இந்த பிரச்னையிலும் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்கலாமே.
ஒருவேளை ஒரேநாடு ஒரே தலைவர் என்ற கோட்பாட்டை பாஜக இதிலும் திணிக்கிறதோ? எது சரி, எது தவறு என்பதை நாட்டு மக்கள் நன்றாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் முடிவு எப்போது தெரியும் தெரியுமா? 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான்!



