கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், கலவரகாரர்களை ட்ரோன் மூலம் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைக்க ஒத்திகை நிகழ்வானது நேற்று நடத்தப்பட்டது. காவல்துறையினரே கலவரக்காரர்கள் போல நடிக்க, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது.
கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வில், காவல்துறையினர் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி காவல்துறைக்கு எதிராக முழக்கமிட, டிரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்ட பின்னர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது இந்த டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும் எனவும் , ஒரே நேரத்தில் நான்கு கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், இரண்டு நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ட்ரோன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும் எனவும் ஓடிச் செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் காவல் துறையில் டிரோன்கள் பயன்படுத்தவது கோவையில்தான் முதல்முறை எனவும் காவல் ஆணையர் பாலகிருஷணன் தெரிவித்தார்.



