திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லம்தேடி கல்வித் திட்டத்தில் 11 வட்டாரங்களிலும், தொடக்க நிலைமையம் 1319-ம் (1 முதல் 5 வகுப்பு), உயர் தொடக்க நிலை மையம் 936-ம் (6 முதல் 8 வகுப்பு) ஆக மொத்தம் 2255 மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் தொடக்க நிலைய மையத்தில் மாணவ, மாணவிகள் 25529-ம், உயர் தொடக்க நிலைய மையத்தில் மாணவ, மாணவிகள் 18603-ம் என ஆக மொத்தம் 48132 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
தச்சநல்லூர், ஊருடையான் குடியிருப்பு, பாறையடி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மையங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மாணவர்கள் கற்கும் திறனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பதி செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் ஒன்றரை மணி நேரம் வரை (மாலை 5 முதல் 7 மணிக்குள்) குறை தீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி எனும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக மாவட்டத்தில் திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம் பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளைப் பெற்ற ஆசிரியர்களில், கல்வி மாவட்ட அளவில் ஓர் ஆசிரியரும், ஒன்றிய அளவில் இரண்டு ஆசிரியர்களும் இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக முழு நேரமாக செயல்பட மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இப்பணியில் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்பட்டு வரும் ஆசிரியிர்கள் பணிபுரியும் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை
இத்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு கற்கும் குழந்தை களையும், தன்னார் வலர்களையும், மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்துதல் வேண்டும். அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளும் வழங்குதல் வேண்டும்.
அரசுப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி உயர்நிலை மையங்களில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் பேச்சாற்றல், ஓவியம், கலைகள், கல்வி போன்றவற்றில் பல்வேறு திறமைகளை வளர்த்து திறன்பட செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
உதவி திட்ட அலுவலர் சிவராஜ், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.நம்பிராசன், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோ.அகஸ்றீன், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உமா, நாகலெட்சுமி, முருகேஸ்வரி, சத்தியவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



