கோவை வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் நரம்பு வழி செலுத்தும் மருத்துவ திரவங்களை கண்காணிப்பதற்கான ஸ்மார்ட் பயோசிம் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கூட்டு கண்டுபிடிப்பு மையம் மற்றும் இன்குபேஷன் நிறுவனமான டெக்ஸோ சொல்யூஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட் பயோ சிம் என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.
ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணஸ்வாமி கருவியை அறிமுகம் செய்து வைத்தார்.
மருத்துவமனைகளில் உள்ள நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் ஊழியர்கள், நோயாளிகளுக்கு விரைந்து சேவை செய்வதற்கு பயனுள்ளதாக உருவாக்கபட்டுள்ள ஸ்மார்ட் பயோ சிம் பல்வேறு வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு நரம்பு வழி செலுத்தும் குளுக்கோஸ், ரத்தம், மருந்து போன்ற திரவங்களை வழங்குவதைத் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்பாகும்.
ஒலி எழுப்பும் வடிவில் விழிப்பூட்டல்
இந்தத் தயாரிப்பு திரவ அளவைத் தொடர்ந்து கண்காணித்து, திரவம் ஒரு முக்கியமான நிலைக்குக் கீழே செல்லும் போது தொலைநிலை கண்காணிப்புக்கு உட்பட்டு செவிலியர் நிலையத்திற்கு மொபைல் செயலி மூலமாகவும் ஒலி எழுப்பும் வடிவில் விழிப்பூட்டல்களை அளிக்கிறது.
இந்த கருவியின் செயல்பாடு, பணியில் இருக்கும் நர்சிங் ஊழியர்களுக்கும் நோயாளிகளின் உடனிருக்கும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஐ. சி .யு பிரிவு தலைவர் டாக்டர் பி.ராம்குமார், ரெசிடெண்ட் மெடிக்கல் ஆஃபீசர் டாக்டர் .அழகப்பன், நர்சிங் துறை தலைவர் டாக்டர் கற்பகம் ஆகியோர் தெரிவித்தனர்.
இக்கருவியை பயோமெடிக்கல் பேராசிரியர் திவ்யலட்சுமி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட் ருமெண்டேஷன் பேராசிரியர் திருக்குறள்கனி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கிய மாணவர்கள் அம்ரிதா, ஷெவேணி அருண் , லோகபிரகாஷ் , யோகிதா ஆகியோரை நிர்வாக அறங்காவலர் மிகவும் பாராட்டி இக்கண்டுபிடிப்பை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுமாறு உற்சாகப்படுத்தினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு, எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார், மருத்துவமனையின் டீன் டாக்டர் சுகுமாரன், செயல்பாட்டுத் தலைவர் பூர்ணிமா, கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ் பயோமெடிக்கல் துறைத்தலைவர் ராமமூர்த்தி, மருத்துவமனையின் தொழில் நுட்பத்துறை தலைவர் விஸ்வநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



