உலக மரபு நாளை (World Heritage Day) முன்னிட்டு மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நேற்று (ஏப்.18) நடைபெற்றது.
யாக்கை மரபு அறக்கட்டளை முன்னெடுக்கும் இந்நிகழ்வில் கோவை அரசு கலைக்கல்லூரி, நிர்மலா மகளிர் கல்லூரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்பேரணியில் மரபு நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம், எவையெல்லாம் மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெறும், மரபுச் சின்னங்களின் சிறப்புத்தன்மை, வரலாற்று முக்கியத்துவம், மரபுச் சின்னங்களின் இன்றைய நிலை, பாதுகாக்கும் வழி முறைகள் குறித்தான விழிப்புணர்வு பதா கைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முழக்கங்கள் செய்யப்பட்டன.
சிறப்பு விருந்தினர்
நிகழ்வை கோவை கூடுதல் அரசு வழக்கறிஞர் ப. கிருஷ்ணமூர்த்தி கொடி யசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கோவை அலுவலர் ஜெயப்பிரியா, கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
கோவை பந்தைய சாலையில் உள்ள பூங்கா அருகில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, பந்தய சாலை முழுவதும் பயணித்து பின்னர் பார்க் இடத்திலேயே முடிவுப் பெற்றது.
வரலாற்றைக் கற்கும் மாணவர்கள் வரலாற்றைக் காக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினர். மரபுச் சின்னங்கள் பண்டையக்கால மக்களின் அறிவுச் சொத்து என்பதால் அவற்றை பத்திரமாக எதிர்கால தலைமுறைக்கு கொண்டுச் சேர்ப்பது அனைவரின் கடமை என்று உணர்த்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்பேரணி நடை பெற்றது.



