கோவை ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் டாக்டர் ராஜம்மாள் பா.தேவதாஸின் 80-வது பிறந்த நாள் சொற்பொழிவு நடந்தது.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் உதவி நிர்வாக அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசும்போது, டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் உலகம் அறிந்த ஊட்டச்சத்து நிபுணர். முயற்சி மற்றும் கடின உழைப்பின் காரணமாக பல சாதனைகள் புரிந்தவர்.
பன்னாட்டளவில் ஊட்டச்சத்து ஆய்வுகளை மேற்கொண்டவர். 57 நூல்களையும், 500 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 27 விருதுகளைப் பெற்றவர். இவருடைய பெயரால் 1999-ம் ஆண்டில் இருந்து விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டு இந்த விருதுக்கு, சென்னை நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி.மோகன் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு வழங்கப்படுகிறது என்றார்.
உணவு முறை
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் ச.பா.தியாகராஜன் பேசும்போது, தினமும் உட்கொள்ளும் உணவுகளில், கலோரி அளவு எவ்வளவு என்கிற பொதுவான கண்ணோட்டம் மட் டுமே காணப்படுகிறது. இத்தகைய உணவு முறை பழக்கங்களால் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றார்.
விருது பெற்ற சிறப்பு விருந்தினர் டாக்டர் வி. மோகன், இந்தியாவின் நீரிழிவு தொற்று நோயை சமாளித்தல்: உணவின் பங்கு என்னும் பொருண்மையில் பேசியதாவது: உலகிலேயே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தற்போது 74 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 125 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு கிராமப்புறங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கேரளா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே கிராமப்புறங்களில் இது அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய்க்கு வெள்ளை அரிசி தீமை தருவதால் சிறு தானியங்களான தினைகள் நன்மை தருவனவாகின்றன. இத்தினைகள் மெருகூட்டப்பட்டவையாக இருந்தால் அதில் எவ்வித பயனும் இல்லை.
மெருகூட்டப்படாத தினைகள் மற்றும் உணவு தானியங்கள் நார்ச்சத்தும் நுண்ணூட்டச் சத்துகள் நிரம்பியதாக இருக்கும். பருப்பு வகைகள் தாவரபுரதத்தின் நல்ல மூலமாகும்.
இப்பருப்பு வகையினை உட்கொள்வதால் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக இருக்கும் என்றார். மனையியல் புலமுதன்மையர் முனைவர் ந.வாசுகி ராஜா வரவேற்றார். பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா நன்றி கூறினார்.



