காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் ஜி.பி.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உரை
நகர தலைவர் தங்கமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது,பேசிய கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வாழையடி வாழையாக, பாரம்பரியமாக நாட்டிற்காக உழைத்துக் கொண்டி ருப்பவர்கள். தேசம் தற்போது இருட்டை நோக்கி சென்று கொண்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்தை ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்டோரிடம் அடகு வைத்து விடக்கூடாது.எது நடந்தாலும் அணி அணியாக ராகுல் காந்தியின் பின்னால் அணிவகுப்போம் என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக அரசினை கண்டித்தும்,பாஜக அரசின் விலையேற்றத்தை கண்டித்தும், ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்த மோடி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் விஜயகுமார்,முன்னாள் நகர தலைவர் மீனா ஹரி,மேட்டுப்பாளையம் நகர மன்ற கவுன்சிலர்கள் கவிதா, அனிதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக காரமடை நகர தலைவர் நாகராஜ் நன்றியரை தெரிவித்தார்.



