சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோரூர் கிழக்கு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
இச்செய்தியாளர் பயணத்தில், ஆட்சியர் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
அவ்வாறு அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக குடிநீர் இயக்கத்தின்கீழ் கடந்த ஒன்றரை ஆண்டில் சங்ககிரி – தேவூர் கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தில் 19,702 தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் வழங்கிட ரூ.19.78 கோடி மதிப்பீட்டில் 280 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
தற்போது 86 பணிகள் ரூ.240 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 194 குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மோரூர் கிழக்கு ஊராட்சிக்கு மட்டும் 11 பணிகள் 1,033 தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் வழங்கிட ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று வருகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் 394 பணிகள் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின்போது மோரூர் கிழக்கு ஊராட்சி, தாசநாயக்கன்பாளையம் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியம் (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ் பெருமாள் கோயில் மேடு முதல் கண் துப்பட்டியான் காடு வரை ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், தாசநாயக்கன்பாளையத்தில் ரூ.7.55 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மோரூர் கிழக்கு சமுதாயக்கூடம் முதல் மாரியம்மன் கோயில் வரை கான்கிரீட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டு பிரதான கால்வாயில் இணைக்கப்பட்டுள்ள பணி யும் ஆய்வு செய்யப்பட்டது.
மோரூர் கிழக்கு ஊராட்சி, தாசநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்று வரும் பொது சுகாதார வளாகம் பராமரிப்புப் பணியினையும், 15-வது நிதிக்குழு மானியம் (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ் ரூ.5.96 லட்சம் மதிப்பீட்டில் தாசநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ள இடத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் தாசநாயக்கன்பாளையம் அங்கன்வாடி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன.
பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 4,107 பணிகள் ரூ.349 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,510 பணிகள் ரூ.97.50 கோடி மதிப்பீட்டிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 32,949 பணிகள் ரூ.625.38 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 57 பணிகள் ரூ.23.92 கோடி மதிப்பீட்டிலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 356 பணிகள் ரூ.7.66 கோடி மதிப்பீட்டிலும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் 92 பணிகள் ரூ.26.23 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1,129.69 கோடி மதிப் பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம் தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ. பாலச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து, உதவி செயற்பொறியாளர் யுவனேஷ், மேகலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



