ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட் டம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் நேற்று மாலை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சி யாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சிலை அருகே துவங்கி ஜவஹர் பஜார் வரை மனித சங்கிலி போராட்டம் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் தமிழ் மணியன் தலைமையில் நடைபெற்றது.
மனித சங்கிலி
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரியசாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கிய பிரேம்குமார், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், இருபால் ஆசிரியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



