திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ்நாட்டின் முதல் முறையாக, ஆதிதிராவிடர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று (ஜன.6) திறந்து வைத்தனர்.
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நகர்ப்புற ஆரம்பர சுகாதார மையக் கட்டடம் உள்ளி ட்ட ரூ.58.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங் களையும் திறந்து வைத்தனர்.
விழாவுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் தலைமை தாங்கி னார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது,
மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர். அந்த வகையில், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றும் வகையில் தான் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காலத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூ.4,000 வழங்கி 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல்வர் வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களில் பாதிக்கக்கட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர்.
படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் நோக்கில் முதல்வரால் வகுக்கப்பட்ட உன்னத திட்டம் ஆகும். விபத்து நடந்த உடன் எவ்வித தாமதமும் இல்லாமல் விபத்தில் சிக்கியவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
கலைஞர் வரும் முன் காப்போம் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் முதல்வர் 1,00,001-வது நபருக்கு மருத்து பெட்டகத்தினை வழங்கினார்.
வீடு தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் – 48 திட்டத்தின் மூலம் சாலையில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க கூடியவர்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.5,000 மற்றும் அடிபட்டவர்களுக்கு 48 மணி நேரம் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்றுக்கொள்கிறது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நீர்வளங்களை பாதுகாப்ப தற்கென்றே நீர்வளத்துறை என்கின்ற புதிய துறையை உருவாக்கி அதற்கென்று தனி அமைச்சரை தந்து தண்ணீரை வீணாகாமல் கடலுக்கு செல்வதை தடுத்து நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப்பெண் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால், பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.
இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்குகின்ற வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை, முதல்வர் துவக்கி வைத்தார். இந்த பகுதியின் பெர்து மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்ததாவது:
2022-2023-ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது இரண்டாயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க வாய்ப்புள்ள மாவட்டங்களில் ,தலா 50 உறுப்பினர்களைக் கொண்ட 40 புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கப்படும்.
அச்சங்கங்களுக்குத் தேவைப்படும் பால் குவளைகள் (Milk Cans), பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அதனை செயல்படுத்தும் விதமாக, மடத்துக்குளம் வட்டம், கொமரலிங்கம் கிராமத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் பால்வளத்துறை இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை மட்டும் உறுப்பினர்களாக கொண்ட தமிழ்நாட்டின் முதல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
மடத்துக்குளம் ஊராட்சி
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், குமரலிங்கம் பேரூராட்சி, குமரலிங்கம் கிழக்கில் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆதிதிராவிடர் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம், பெருமாள்புதூரில் புதிய ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பெரிய பாப்பனூத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரிய பாப்பனூத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், போடிபட்டியில் ரூ.10.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், உடுமலை நகராட்சி, வார்டு எண்.31 ராமசாமி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
உடுமலைப்பேட்டை நகராட்சி, பார்க் பள்ளிக்கூட வளாகத்தில் வேலை வாய்ப்பு துறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உடுமலைப் பேட்டை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், உடுமலைப் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மணிகண்டன், துணைப்பதிவாளர்கள் (பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்) கே.பழனிச்சாமி, சைமன் சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



