இந்தியாவில் சீட்டு நிதி வர்த்த கத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக திருக்குறள் பேச்சுப் போட்டி நடத்தியது.
இதில், ஈரோடு மண்டலத்தைச் சேர்ந்த வளையபாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி வி.நா. தமிழ்க்கனி, இடைநிலைப் பிரிவில் முதல் பரிசையும், கோவை மண்டலத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பண்பாட்டுப் பள்ளி மாணவி பா.ஹரிஷினி மேல்நிலைப் பிரிவில் முதல் பரிசையும், கோவை பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மு.கவிநிலவன் கல்லூரிப் பிரிவில் முதல் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு’ (6-8 ம் வகுப்பு), ‘மேல்நிலைப் பிரிவு’ (9-12 வகுப்பு), ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் மொத்தம் 1597 மாணவர்கள் பங்கேற்றனர்.
சென்னை தெற்கு, சென்னை வடக்கு, தஞ்சாவூர், திருச்சி, திரு வாரூர், புதுச்சேரி, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன.
இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடை பெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் என 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றோர்
இதில் மாநில அளவில் வெற்றி பெற்றோர் விவரம்: இடைநிலைப் பிரிவு: முதல் பரிசு: வி.நா. தமிழ்க் கனி, அரசு உயர்நிலைப் பள்ளி, வளையபாளையம், ஈரோடு (ஈரோடு மையம்) 2-ம் பரிசு: ப. யாழினி, சேது பாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர், சென்னை (சென்னை மையம்) 3-ம் பரிசு: தி. தீஷா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செவ்வாய்ப்பட்டி, புதுக்கோட்டை (தஞ்சாவூர் மையம்).
மேல்நிலைப் பிரிவு: முதல் பரிசு: பா. ஹரிஷினி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பண்பாட்டுப் பள்ளி, மேட் டுப்பாளையம் (கோவை மையம்) 2-ம் பரிசு: இரா. ஆதிரை, பாலசம் அகாடமி, ராணிப்பேட்டை (வேலூர் மையம்), 3-ம் பரிசு: ஸ்ரீ. பத்மப்ரியா, வேலம்மாள் வித்யாலயா, முகப்பேர் மேற்கு, சென்னை (சென்னை மையம்).
கல்லூரிப் பிரிவு: முதல் பரிசு: மு. கவிநிலவன், பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை (கோவை மையம்) 2-ம் பரிசு: ச. தனராஜ், ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர் (நெல்லை மையம்), 3-ம் பரிசு அ. சீதளாதேவி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (தஞ்சாவூர் மையம்).
முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ. 10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ. 7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.



