fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் உதகை அரசு மருத்துவமனையில் இலவசமாக 4 பேருக்கு...

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் உதகை அரசு மருத்துவமனையில் இலவசமாக 4 பேருக்கு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை

உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம், முதுகு தண்டுவடம் சிகிச்சை மேற்கொண்ட நபர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரீத் கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரீத் செய்தியாளர்கள் பயணத்தின் போது தெரிவித்ததாவது:- தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பில் பல திட்டங்களை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,60,144 நபர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

முட நீக்கியல் மற்றும் முதுகு தண்டு வலி சம்மந்தமான உடல் உபாதைகள் பாதிக்கப்பட்ட நபர்கள் இதுவரை மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும், கூடலூர் பகுதியில் உள்ளவர்கள் கேரள மாவட்டத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்காக சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் கடந்த ஓரிரு மாதங்களாக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறை சார்பில் இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்; கீழ் முழுவதுமாக எந்தவித கட்டணமும் இல்லாமல் நமது மாவட்டத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்பட்டு தற்பொழுது நல்ல நிலையில் உள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறுவைச் சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக அரசு மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மேலும், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதுகு தண்டு வலி அதிகமாக காணப்படும், பொதுமக்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுமக்கள் இதுபோன்ற சிகிச்சை உதகை அரசு மருத்துவமனையில் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

முதுகு தண்டு வலியில் அவதிப்படும் நோயாளிகளுக்கு முதலில் மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இயன்முறை சிகிச்சை கொண்டு முதலில் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் அனைத்து பரிசோதனைகளும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணம் இன்றி இலவசமாக செய்யப்படுகிறது.

மேலும், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 3 மணி நேரத்திற்குள் ‘ஆண்டிபிளேஸ்” என்ற மருந்தினை செலுத்த வேண்டும். வெளியில் இந்த மருந்தின் விலை ரூ.40 ஆயிரம் ஆகிறது. ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இம்மருந்தானது இலவசமாக அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.

இம்மருந்தினை செலுத்துவதன் மூலம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்காக உதவும். இதுபோன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இதனை பொதுமக்கள் தெரிந்து கொண்டு தனக்கு தேவைப்படும் சிகிச்சைகளை நமது அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி சரோஜா தெரிவித்ததாவது:- என் பெயர் சரோஜா. என் கணவர் பெயர் ஜெய்கோபி. எனக்கு வயது 52 ஆகிறது. நான் நொண்டிமேடு ஓபார்டு பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன்.

இந்நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டேன். பின்னர் எனக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இம்மருத்துவமனையில் எனக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்ட காரணத்தினால் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினேன்.

இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததாவது:- என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. எனக்கு 58 வயதாகிறது. நான் கக்குச்சி இந்துநகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகுதண்டு வட பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.

இந்நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டேன். பின்னர் எனக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இயன்முறை பயிற்சி அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் முறையாக அளிக்கப்பட்டதன் பேரில் விரைவில் வீடு திரும்பினேன்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் சுமார்ரூ.1 லட்சம் வரை செலவாகி இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்பொழுது நலமாக உள்ளேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, முடநீக்கியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் அமர்நாத், முட நீக்கியல் துறை மருத்துவர்கள் லோகராஜ், ஜெய்கணேஷ் மூர்த்தி, இயன்முறையியல் மருத்துவர் பிரமிளா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

இந்த தகவலை நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img