“இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்”
தானே தொழில் செய்து உணவு உண்ணும் இயல்புடையோர் என்றென்றும் சிறப்புடையவராவர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைய தலைமுறையினரின் பொருளாதார மேம்பாட்டை கருத்திற் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்திவருவது இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் துவங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்ததாவது:
தமிழக அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க செய்யும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS)என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழிலுக்கு ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.
இத்திட்டத்தின் கீழ் 21 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 45 ஆகும். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி தளர்வு
தமிழக அரசு தற்சமயம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கல்வித்தகுதி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதனை தளர்த்தி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும் என்பதனை உயர்த்தி அதிகபட்ச தனிநபர் முதலீட்டு மானியம் ரூ.75 இலட்சம் வழங்கப்படும் எனவும் பட்டியலினம் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும் எனவும் 01.10.2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
புதிய சுயதொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தினை மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
அதிகபட்சம் ரூ.20 லட்சம்
தற்போது 01.06.2022 முதல் உற்பத்தி தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.25 இலட்சத்திலிருந்து ரூ.50 இலட்சமாகவும், சேவை தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாகவும் உயர்த்தி ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட போக்குவரத்து வாகனங்களை வாங்கவும் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனம் உற்பத்தி பிரிவிற்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், சேவை மற்றும் வியாபார பிரிவிற்கு 60 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
புதிய வழிகாட்டுதல்களின் படி திட்ட மதிப்பீடு ரூ.2 இலட்சம் வரை இருக்கும் பட்சத்தில் தொழில்முனைவோர் பயிற்சி தேவை இல்லை, திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சம் வரை இருக்கும் பட்சத்தில் தொழில் முனைவோர் பயிற்சி 5 நாட்களும், அதற்கு மேல் திட்ட மதிப்பீடு இருக்கும் பட்சத்தில் தொழில் முனைவோர் பயிற்சி 10 நாட்களும் பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. திட்ட மதிப்பீடு உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 இலட்சத்திற்கு கூடுதலாகவும் மற்றும் சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 இலட்சத்திற்கு கூடுதலாகவும் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு நகர்புறப் பகுதிகளில் தொழில் துவங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரையிலும், கிராமப்புறப் பகுதிகளில் தொழில் துவங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் வரையிலும் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.kviconline.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மேற்கண்ட சலுகைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் துவங்கி பயனடையலாம்.
மேலும் விபரங்களுக்கு சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை 0427 – 2448505, 2447878 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ, நேரிலோ அணுகி பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ரூ.27.20 இலட்சம் கடனுதவி
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி பெற்று, உலர் சாம்பல் கற்கள் (FLY ASH Bricks) தயாரிக்கும் நிறுவனம் நடத்தி பயனடைந்து வரும் சேலம், மாவட்டம், ஓமலூர் வட்டம், பச்சனம்பட்டியை சேர்ந்த ஏ.லாவண்யா தெரிவித்ததாவது:
நான் தொழில்நுட்பப் பொறியாளர் பட்டம் பெற்றுள்ளேன். எனது கணவர் தனியாக மருந்துகடை வைத்துள்ளார். சொந்த ஊரில் இருந்தபடியே ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் கிடைத்த வேலைவாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து வந்தேன். எனது பெற்றோர் செங்கல் சூளை வைத்திருந்தனர்.
செங்கல் தயாரிப்பதற்கான மண் தட்டுப்பாடு நிலவியதாலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்று ஏற்பாடாகவும் இயந்திரங்களின் உதவியுடன் உலர் சாம்பல் செங்கற்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கலாம் என்று எண்ணி வந்தேன். ஆனால் அதற்கு போதிய அளவில் முதலீடுகள் இல்லாமல் பல ஆண்டுகளாக என்ன செய்வதென்று சிந்தித்து வந்தேன்.
அந்த சமயத்தில் செய்தித்தாள்களின் வாயிலாக ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி வழங்குவது தொடர்பான செய்தி வெளியானது.
இச்செய்தியை அறிந்த பின் சேலம், குரங்குசாவடியில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தில் மாவட்ட பொது மேலாளர் அவர்களை அணுகி எனது அனுபவம் குறித்த சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களை வழங்கி விண்ணப்பித்தேன்.
நிகர லாபம் ரூ.15 ஆயிரம்
விண்ணப்பத்தினை பரிசீலித்து புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கி, ஓமலூர் கிளையின் உதவியுடன் ரூ.5.16 இலட்சம் மானியம் உட்பட ரூ.27.20 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி கிடைத்தது. கடனுதவியுடன் உலர் சாம்பல் செங்கற்கள் தயாரித்தல் தொழில் தொடங்கினேன்.
தொழில் தொடங்கி சில மாதங்களில் ரூ.65,000 த்தினை கடனுதவி அளித்த வங்கிக்கு திருப்பி செலுத்தியது போக நிகர லாபமாக ரூ.15,000 வருவாய் கிடைக்கிறது. வரும் நாட்களில் வருவாய் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
தொழில் தொடங்க போதிய அளவில் முதலீடுகள் இல்லாமல் தவித்து வந்த எனக்கு தமிழக அரசின் மூலம் நிதியுதவி கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களது கனவை நனவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை எங்களைப் போன்ற தொழில்முனைவோர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் லாவண்யா.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிற்கிணங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளையும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருவது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் வெற்றிகரமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
சுயதொழில் யோசனை
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று தென்னை நார் கயிறு மற்றும் தென்னைக் கட்டிகள் தயாரித்தல் தொழிற்சாலை அமைத்து பயனடைந்து வரும் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பில்லுக்குறிச்சியை சேர்ந்த எம்.நவீன் கூறியதாவது:
எனது தந்தை பெயர் முருகேசன். நான் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். 2018-ம் ஆண்டு படிப்பை முடித்த எனக்கு சரியான வேலை கிடைக்காமல் பல நிறுவனங்களிடம் வேலை கேட்டு மனதிற்கு பிடிக்காமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
எனக்கு கிடைத்த மாத சம்பளம் எனது அன்றாட அத்தியாவசிய தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக இருந்தது. எனது எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர்.
எனவே அவ்வேலையை விட்டுவிட்டு, எங்களது சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் என்பதால், அதை சார்ந்து ஏதாவது சுயதொழில் மேற்கொள்ளலாம் என யோசித்தேன்.
அதே சமயம் எனது தந்தைக்கு மேலும் பொருளாதார நெருக்கடி கொடுக்காமல் சுயமாகவே முன்னேற வேண்டும் என்ற ஆதங்கம் என்னிடம் இருந்தது.
ரூ.1.11 கோடி கடனுதவி
இந்நிலையில் எனது உறவினர் மூலம் தமிழக அரசின் சார்பில் மாவட்ட தொழில் மையத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து அறிந்தேன். உடனடியாக சேலம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி சுயமாக தென்னை நார் கயிறு மற்றும் தென்னைக் கட்டிகள் தயாரித்தல் தொழிற்சாலை அமைக்க விண்ணப்பித்தேன்.
எனக்கு தமிழக அரசின் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கனரா வங்கி, எடப்பாடி கிளையின் உதவியுடன் ரூ.1.11 கோடி கடனுதவி கிடைத்தது. இதில் அரசின் மானியமாக ரூ.28.90 இலட்சம் வழங்கப்பட்டது.
வருமானம் ரூ.3 லட்சம்
இதன்மூலம் எனது கனவை நனவாக்கும் வகையில் தென்னை நார் கயிறு மற்றும் தென்னைக் கட்டிகள் தயாரித்தல் தொழிற்சாலையை அமைத்துள்ளேன். தற்போது தென்னம் பட்டைகளை பொள்ளாச்சி, பரமத்தி வேலூர், அந்தியூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெற்று வருகிறேன்.
தென்னம் பட்டைகளில் இருந்து நாளொன்றிற்கு சுமார் 3.5 டன் தென்னை நார் உற்பத்தி செய்ய முடிகிறது. நாள் முழுவதும் தொழிற்சாலை இயங்குவதால் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு அதன் மூலம் மாதம் சுமார் 3 இலட்சம் வரை வருமானம் பெற முடிகிறது. கடன் வழங்கிய வங்கிக்கு மாதத்தவணையாக ரூ.2.25 இலட்சம் செலுத்தப்படுகிறது.
வாழ்வில் நான் எண்ணிய கனவை நனவாக்கி தற்போது மனநிம்மதியுடனும், ஆர்வத்துடனும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறேன்.
தமிழக அரசின் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை எங்களைப் போன்ற தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் நவீன்.
தொகுப்பு
ச. சுவாமிநாதன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.



