தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள ஆட்சேபகரமான அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் வீடற்ற ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் பொருட்டு, ஒன்றிய அரசின் மானியம் ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.7 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 400 சதுர அடிபரப்பளவில் அனைத்து அடிப்படைவசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு குடியிருப்பும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பால்கனியுடன் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டப்பகுதிகளில் தெருவிளக்குகள், தார்சாலை, மழைநீர் வடிகால், நூலகம், கடைகள், பூங்கா, சமுதாயக்கூடம் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 11,890 குடியிருப்புகளில் 1184 அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைவடைந்து 932 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு, தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10.01.2022 அன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
‘நீங்கியது துர்நாற்றம் நிரந்தரமாகியது மாடி வீடு’
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆர்.ஷீலா தெரிவித்ததாவது: எனது கணவர் பெயர் டி.ரவிச்சந்திரன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நாங்கள் கள்ளியங்காடு (ஓடைப்பள்ளம்) ஒட்டிய பகுதியில் குடிசை வீடு அமைத்து, கடந்த 36 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தோம். அந்த ஓடையின் தூர்நாற்ற வாடையிலும், கொசுக்கடியிலும், சுகாதாரமற்ற முறையில் மிகவும் கஷ்டத்துடன் வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்ந்து வந்தோம்.
எங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். தற்போது, தமிழக முதல்வர் உத்தரவினால், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட கொல்லம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி மூலமே பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு, வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, மாடி வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. எங்களது குழந்தைகள் மாடி வீடு சொந்தமாக கிடைத்தது என்று பெருமையாக இருக்கிறார்கள்.
எங்களின் வாழ்வாதாரம் தற்போது உயர்ந்துள்ளது.
நாங்கள் நல்ல வேலைக்கு சென்று வருகிறோம். குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாகவும், சுகாதாரமாகவும் வாழ்ந்து வருகிறோம்.
எங்களுக்கு இந்த வாழ்வினை அளித்த தமிழ்நாடு முதல்வர், வீட்டிற்கான உத்தரவு ஆணை வழங்கிய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
‘கைவிட்டனர் உறவினர்கள் கைகொடுத்தார் முதல்வர்’
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கா.ஜெமிலா தெரிவித்ததாவது:
எனது கணவர் பெயர் காஜாமைதீன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் பெரும்பள்ளம் ஓடையை ஒட்டிய பகுதியில் குடிசை அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தோம்.
ஓடைபள்ளம் பகுதியில் மழைக்காலம் வந்துவிட்டால் வீட்டினுள் மழைநீர் உட்புகுந்து மிகவும் சிரமப்பட்டோம். வாடகை வீட்டில் குடி இருக்கவும் வசதி இல்லை. எங்கே செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.
இந்நேரத்தில் முதல்வர் உத்தரவினால் மாடி வீடு கிடைக்க மனு அளிக்க அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் சொன்னார்கள். அதன்படி நான் என் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று வீடு கேட்டு மனு அளித்தேன்.
தொடர்ந்து வீட்டுவசதி வாரியத்தில் இருந்து ஆவணங்கள் கேட்டார்கள். நானும் சென்று கொடுத்து வந்தேன்.
ஒரு மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொன்னார்கள்.
நானும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கையால் உத்தரவை பெற்றோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உற்றார் உறவினர் பெற்றோர் எங்களைக் கைவிட்ட நிலையில் தாயுள்ளத்தோடு எங்களுக்கும் ஒரு வீடு வழங்கி குப்பையில் வாழ்ந்த எங்களை கோபுரத்தில் வைத்து அழகு பார்த்தவர் முதலமைச்சர்.
எங்களுக்கும் மாடிவீடு கொடுத்து எங்களையும் சுகாதாரமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வருக்கு எனது குடும்பத்தின் சார்பாக என்றென்றும் நன்றி கடன் பட்டு இருப்போம் என்றார்.
தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.



