நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சு வார்த்தை இன்று நடை பெற்றது. தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியி டங்களும், 138 நகராட் சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூ ராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப் பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப் படையில் நடைபெற உள்ளது. மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்களும், 1,42,45,637 பெண் வாக்கா ளர்களும், 4.324 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சிக்குள் நேற்று பேச்சுவார்த்தை நடந் தது. இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிமுக சார்பில் போட் டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக – பாஜக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை தொடங்கியது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு கட்சி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், பழனி சாமி, பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட் டோரும் பங்கேற்றனர். நேற்று பாஜகவை அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பாஜக நிர்வாகிகள் குழுவில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் இடம் பெறவில்லை. அதிமுக தலைவர்களை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக குழுவில் அவர் இடம்பெறவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் அண்ணாமலை, பொன்ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.



