இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும் அதே சமயம் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த ஆலமரம் தொண்டு நிறுவ னத்தின் செயலாளர் அர்ஜுனன் இளைய ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் தெரிவித்து இருப்பதாவது:
நாட்டில் ஒரே சீரான கல்வி முறையைக் கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அறிவித்துள்ளது.
பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள் கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள் கையை, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது.
தேசிய கல்விக் கொள்கை இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கவில்லை. தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கை யையே வலியுறுத்துகிறது. அந்நிய மொழியான ஆங் கிலத்தை அனுமதிக்கும்போது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
கல்வித் தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும். எனவே, தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ் வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘எந்த மொழியை கற்க வேண்டும் என்பது பற்றி மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்ற போதிலும் இந்தி படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.
இந்தி தெரியவில்லை என்றால் வேறு மாநிலங்களில் பணியாற்ற செல்வோருக்கு சிக்கல் ஏற்படும். ஆகவே மக்கள் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.
மேலும் மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது என்றும் கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், ‘இந்தி படிப்பதை யாரும் தடுக்க வில்லை. அதே சமயம் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும் என்பது அரசின் கொள்கை முடிவு,’ என்று கூறினார்.
இதையடுத்து இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.



