fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்துக்கு விலக்கு கோரி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதா - ஆளுநர் முடிவு என்ன?

தமிழகத்துக்கு விலக்கு கோரி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதா – ஆளுநர் முடிவு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வழிவகை செய்யும் மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வால் ஏழை, எளிய, கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும், இதைக் கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. தெரிவித்து இருந்தது.

ஆட்சிக்கு வந்ததும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, எளிய கிராமப்புற மாணவர் களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

இந்தக் குழுவின் பரிந்து ரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வ டிவு (மசோதா)’ நிறைவேற்றப்பட்டது.

இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு தான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

இந்த நிலையில் நீட் தேர்வு மசோதா கவர்னர் மாளிகையிலேயே கிடப்பில் கிடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலி யுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் இதுவரை கவர்னர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த தீர்மானத்தை தமிழக கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது குறித்தும், தீர்மானத்தை ஜனாதி பதிக்கு அனுப்பி ஒப்புதல் அளிக்கக் கோரியும் கடந்த குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளன்று தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அமளியிலும் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகை அலுவலகம் சென்று ஜனாதிபதியின் செயலாளரிடம் நேற்று மனு கொடுத்துவிட்டு வந்தனர்.

இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் நிலை குறித்தும் அது தொடர்பாக ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து இருக்கும் ஆளுநரின் தகவல் தொடர்பு அதிகாரி எஸ் வெங்கடேஸ்வரன், கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தெரி வித்துள்ளார்.

இந்த மசோதா தொடர் பாக ஆளுநர் அலுவலகம் சார்பில் ஏதேனும் கேள்வி எழுப்பப்பட்டதா என தமிழக முதல்வரின் செயலகம் மற்றும் தலைமை செயலாளர் அலு வலகத்திலும் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சரியான பதில் அளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என தலைமைச் செயலாளரின் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? அல்லது ஏதாவது விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்புவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img