பெண் குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் தொட்டால் குழந்தைகள் பெற்றோருக்கு முதலில் தகவல் தரவேண்டும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தினார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப் புணர்வு கூட்டம் தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் அம்மாதுரை வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பள்ளி மாணவ,-மாணவிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் எண்ணங்களை சிதற விடக் கூடாது. செல்போன்களில் இன்டர்நெட் பயன்படுத்தும்போது தேவைப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தவறானவற்றை பார்க்கக்கூடாது.
பெண் குழந்தைகளை தவறான நோக்கத்தில் தொடும் நபர்கள் குறித்து பெற்றோர்களுக்கு முதலில் தகவல் தரவேண்டும். பின்னர் பார்த்துக் கொள் ளலாம் என அலட்சியமாக இருந்தால் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்.
இதுபோல் பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் குறித்து 1098 அல்லது 181 எண்களில் அழைத்து புகார் தர வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு சட்டம் உள்ளது.
இதேபோன்று மாண வர்கள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து விபரம் தெரிந்தால் போலீசுக்கு தகவல்தர வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் அருகில் எங்கேனும் போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு போதைபொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



