டெங்கு காய்ச்சலுக்குக் குறிப்பிட்ட மாத்திரை மருந்துகளும் கிடையாது. முழுமையான ஓய்வு மற்றும் உடலில் நீர்ச்சத்து சமநிலையைப் பராமரிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று மருத்துவர் தாமஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பருவமழை ஆரம்பித்த உடனேயே வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் டெங்கு ஏறுமுகத்தில் உள்ளது. தட்ப வெப்ப நிலை மாற்றத்தின் விளைவு மற்றும் அதன் தொடர்ச்சி காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்துள்ளது.
நகரமயமாக்கலால் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் காடுகளை அழித்தல் ஆகியவை தீநுண்மிகள் வாழும் சூழலை உருவாக்கி உள்ளன. அசுத்தம் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாக மாறியுள்ளன.
நான்கு வகையான டெங்கு வைரஸ்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஈடஸ் கொசு கடிக்கும் போது டெங்கு பரவுகிறது. டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பூசி எதுவும் இல்லாத சூழலில், தொற்றுக்குப் பிறகு சிகிச்சை அளிப்பதை விட, தொடக்கத்திலேயே வராமல் தடுப்பது நல்லது.
டெங்கு காய்ச்சலுக்குக் குறிப்பிட்ட மாத்திரை மருந்துகளும் கிடையாது. முழுமையான ஓய்வு மற்றும் உடலில் நீர்ச்சத்து சமநிலையைப் பராமரிக்க வேண்டியது கட்டாயமாகும்.
டெங்கு நோய்க்குறி கண்டறிதல்
மருத்துவர்கள் / நோயியல் நிபுணர்கள் உடலில் வைரல் ஆண்டி பாடீஸ் இருப்பதை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனைகளைப் பயன்படுத்துவார்கள். டெங்கு நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க மூலக்கூறு, ஆண்டிபாடி ஆகிய இரண்டு அடிப்படை பரிசோதனைகள் உள்ளன.
ஆரம்ப இரத்த மாதிரி ஆண்டி பாடி பரிசோதனை டெங்கு ஆண்டி பாடி இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும். இதன் மூலம் நோயாளி சமீபத்தில் டெங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அடையாளம் காணப் பயன்படும். தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், பிளேக் ரிடக்ஷன் நியூட்ரலைசேஷன் பரிசோதனையைப் பயன்படுத்தி டெங்கு ஆண்டி பாடீஸ் இருப்பதையும், ஏனைய வைரல் தொற்று இல்லாததையும் உறுதிப்படுத்தலாம்.
பிசிஆர் பயன்படுத்தி எடுக்கப்படும் மூலக்கூறு பரிசோதனை வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் என்பதால் நோய் கண்டறிதலுக்கு இதுவே சிறந்த வழியாகும். பிசிஆர் பரிசோதனை உறுதிப்படுத்தினால் அதுவே முடிவானதாகும்.
சிக்குன்குனியா, மலேரியா, டைஃபாயிட் போன்ற நோய்களுக்கும் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் இருப்பதால், தொடக்கத்தில் நோயியல் பகுப்பாய்வின் உதவியின்றி நோயைக் கண்டறிதல் மிகவும் கடினமாக இருந்தது.
எச்சரிக்கை சமிக்ஞைகள் தவிர்க்கப்படாத நிலையில், மருத்துவர் தொடக்க நிலையிலேயே போதிய சிகிச்சையை வழங்கும் பட்சத்தில், அபாயங்களும், இறப்பு விகிதங்களையும் கணிசமாகக் குறைக்கலாம்.
டெங்கு நோய் அறிகுறிகள்
சிக்குன்குனியா, டைஃபாயிட், மலேரியா போன்ற நோய்களுக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அதே நோய் அறிகுறிகள் டெங்கு நோய்க்கும் இருக்கும் என்பதால், டெங்கு நோயை உறுதிப்படுத்துவது கடினமாகும்.
டெங்கு என்று தவறாகக் கண்டறிந்து முடிவுக்கு வரும் சாத்தியமும் உண்டு. 75% டெங்குத் தொற்றுகளுக்கு எந்தவிதமான நோய் அறிகுறியும் இருக்காது, 20% லேசானது முதல் மிதமானது வரையிருக்கும். 5% டெங்கு காய்ச்சல் மட்டும் கடுமையாக இருக்கும் என்பதால் தீவிர மருத்துவ உள்ளிருப்பு சிகிச்சை தேவைப்படும்.
நோய் அறிகுறிகள்
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான மூட்டு மற்றும் தசை வலி, தோல் தடிமன், குமட்டல் மற்றும் வாந்தி. டெங்கு நோய் அறிகுறிகள் இரு நாள்கள் தொடங்கி ஒரு வாரம் நீடிக்கும்.
ஒரே வாரத்தில் பெரும்பான்மையோர் குணமடைவார்கள். நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் இருப்பதால், கோவிட் போன்று மீண்டும் தாக்காமல் இந்தத் தொற்று உங்களைப் பாதுகாக்காது.
பெரும்பான்மைத் தருணங்களில் இரண்டாம் முறை வரும் தொற்று இன்னும் தீவிரமாகவே இருக்கும். எனவே டெங்கு குறித்த சந்தேகம் இருப்பின் உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள். டெங்கு உறுதியானால் விரைந்து சிகிச்சையைத் தொடங்கவும்.
சிகிச்சை
டெங்கைக் குண்ப்படுத்த குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் ஏதுமில்லை. இதற்கான தடுப்பூசி கூட கிடையாது. முழுமையான ஓய்வு மற்றும் உடலில் நீர்ச்சத்தைத் தேவையான அளவுகளுக்குப் பராமரிப்பதே இதற்கான சிறந்த வாய்ப்பாகும்.
மருத்துவரைச் சந்தித்தால் உங்களைப் பரிசோதித்து, உங்கள் உடல் நிலைக்கேற்ப மருத்துகளைப் பரிந்துரைப்பார்.
டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர் ‘ஃபார்முலா ஆஃப் 20’ அதாவது நாடித் துடிப்பு 20-க்கும் அதிகமாக, குறைந்த மற்றும் அதிக இரத்த அழுத்தம் இடையேயான வேறுபாடு 20-க்கும் குறைவாக, இரத்த அழுத்தம் 20-க்கும் அதிகமாகக் குறைதல், டார்னிக்வெட் என்னும் குருதித் தடுப்புக் கருவி பரிசோதனையில் 20-க்கும் அதிகமான இரத்தக் கசிவுகள் ஆகியவை நோயாளி அதிக அபாய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதால், உடனடி மருத்துவ சிகிச்சை அவசியமாகும்.
நோய்த் தடுப்பு
நோய்க்கான சிகிச்சையை விடவும் அதைத் தடுப்பது சிறப்பாகும். இது குறிப்பாக டெங்கு பரவலுக்கு மிகவும் பொருத்தமாகும். தொற்றுள்ள கொசு கடிக்காமல் தடுப்பதே தொற்று பரவாமலிருக்கச் சிறந்த வழி டெங்குக் காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே உதவும்.
அடர்த்தியான மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து தள்ளி இருக்கவும். உள்ளேயும், வெளியேயும் கொசு விரட்டி பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது, முழுக்கைச் சட்டை, முழுக்கால் பேண்ட், காலுறை அணியுங்கள். கதவுகளும், ஜன்னல்களிலும் துவாரங்கள் இருக்கக் கூடாது.
கதவுகள், ஜன்னல்கள், படுக்கைகளில் கொசு வலைகளைப் பொருத்தவும். டெங்கு தொற்று நோய் அறிகுறிகளோ, சந்தேகமோ இருப்பின் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவும்.
கொசுக்கள் உற்பத்தியாகும் முக்கிய இடங்கள் தண்ணீர் தேங்கும் பகுதிகளே. உங்கள் பகுதியை உலர்வாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளவும். செல்லப் பிராணிகள் குடிக்கத் தண்ணீர் வைக்கும் பாத்திர ங்களை அடிக்கடி மாற்றவும்.
தொற்று ள்ள கொசு வீட்டிலுள்ள மற்றவர்களைக் கடித்து தொற்றைப் பரப்பக் கூடும். எனவே கொசுக்கள் கடிப்பது குறித்து விழிப்புடன் இருங்கள். இது ரொம்பவும் சுலபம் -டெங்கு தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க விரும்பினால், கொசு உங்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை யுடனும் இருங்கள்.
டாக்டர் தாமஸ் ஜார்ஜ்,
நீரிழிவு மற்றும் பொது மருத்துவர்,
ஃபோர்டிஸ் மருத்துவமனை,
வடபழனி, சென்னை.



