நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இயற்றியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் 27ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த இருப் பதாக இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. அரசின் கல்வித் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
நீட் தேர்வு காரணமாக 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு நீட் விலக்கு சட்ட மசோதா இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
கடந்த ஆட்சியிலும் நீட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றபட்டு கிடப்பில் போடப் பட்டது.
இந்த சூழலில் ஆளுநர் சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் இருப்பதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுவதால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மத்திய குழு அக்டோபர் 27ம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக கல்வித் துறையில் மோசமான நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
3, 8 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட வேண்டும் என் பதை மாற்றி வினாடி-&வினா என்ற தேசிய கொள்கையையும் அனுமதிக்க முடியாது.
தமிழகத்திற்கு என தனியாக கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



