தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் மாநகர பகுதிகள் மற்றும் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய, விடிய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 36 மணி நேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் 569 ரவுடிகள் சிக்கினர். அதில் 165 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



