கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்தும், பாரதி பார்க் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து பெறப்படும் உணவுக் கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.23-க்குட்பட்ட பொன்னு ரங்கம் சாலையில் தூய்மைப் பணியா ளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்கா குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளையும் வாகனங்கள் மூலம் குப்பையை கொண்டு செல்லும் பணிகளையும் பார்வையிட்டார் ஆணையாளர்.
தூய்மைப் பணியாளர்களிடம், குப்பையை சேகரிக்கும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். சுகாதாரக் கழிவுகளை (Sanitary Waste) தனியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் குப்பையைக் கொட்ட வேண்டாம்.
குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பையை கொட்ட வேண்டும் என்று ஆணை யாளர் கேட்டுக் கொண்டார்.
மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் பெறப்படும் காய்கறிக்கழிவுகள், மக்கும் குப்பை கொண்டு நுண்ணுயிர் உரம் ((Micro Compost Centre) தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வை யிட்டார்.
அங்கு தயாரித்த உரத்தை அங் குள்ள பொதுமக்கள் அல்லது விவசாயிகளுக்கு வழங்கும்படி உத்தர விட்டார்.
வார்டு எண்.22 மாநகராட்சி பாரதி பூங்கா அருகில் உணவுக் கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்பகுதியில் அமைந்துள்ள 38.90 இலட்சம் கொள்ளளவு கொண்ட சிறுவாணி குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் சரவணக்குமார் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



