fbpx
Homeபிற செய்திகள்ரூ.50 ஆயிரம் கட்டுப்பாடு 50 நாட்கள் நீட்டிப்பு ஏன்?

ரூ.50 ஆயிரம் கட்டுப்பாடு 50 நாட்கள் நீட்டிப்பு ஏன்?

இந்தியாவின் 18 வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி தான். மற்ற மாநிலங்களில் பல கட்டத் தேர்தல் முடிவுற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலை.

முதல் கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களித்த பிறகு, முடிவைத் தெரிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் சுமார் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது போல பெரும் இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்குப் பெருமை தருவதல்ல.

யாருக்கு வசதியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு? என்றெல்லாம் பல விமர்சனங்கள் வந்துள்ளன. நீண்ட இடைவெளியைப் பயன்படுத்தி தில்லுமுல்லு ஏதும் அரங்கேறி விடுமோ என்ற சந்தேகத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அது ஒருபுறம் இருக்கட்டும்.

ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிப்பு தமிழ்நாட்டில் முடிந்த பிறகும்கூட, பணம் எடுத்துச் செல்வோர், வியாபாரிகள், விவசாயிகள் கொள்முதல், வரவு செலவுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாதது.
ஆனால் ஜூன் 4ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடு தொடரும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பலதரப்பு மக்களுக்கும் மிகுந்த தொல்லையைத் தரும். ஒரு பவுன் தங்கத்தை வாங்கக்கூட பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை.

வணிகப் பெருமக்களின் செயற்பாடுகள், திருமணம் போன்ற நிகழ்வுகள், விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்தல் போன்றவற்றிற்கு இது பெரும் இடையூறாகிறது.
எனவே, தேர்தல் கமிஷனின் இந்த நிலைப்பாட்டினை ரத்து செய்து, மக்களின் துன்பம் துடைப்பது மிகவும் அவசியமாகும். தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக பணப்புழக்கத்தை முடக்குவது மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுபற்றி தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்து நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே தமிழ்நாடு உள்ளிட்ட முதல்கட்ட தேர்தல் நடக்கும் மாநில மக்களின் எதிர்பார்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img