கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், 2026-சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர் களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்திட தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சத பலூன் அமைத்தல், ஒலிபெருக்கியின் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் தேர்தல் குறித்த ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஏற்படுத்துதல், பொது இடங்களில் விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களுடன் தேர்தல் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கிடவும் ஆவின் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகத்தினை அச்சிட்டு வழங்கிடவும். வீடுகளில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த ஒட்டுவில்லைகளை ஒட்டி வழங்கிடவும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட மஞ்சப்பைகளை வாக்காளர்களுக்கு வழங்கிடவும் வனத்துறை மூலம் தேர்தல் விழிப்புணர்வு வாசக வடிவில் மரக்கன்றுகளை நடுதல், சுற்றுலாத் துறை சார்பில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் கூடும் முக்கிய சுற்றுலா தளங்களில் கலைநிகழ்ச்சிகள், தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்திடவும், மீன்வளத்துறை மூலம் படகுப் போட்டிகள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு குறித்து மணல் சிற்பங்கள் மூலமும், ரோபோக்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகள் மூலம் இயற்கையான முறையில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்திடவும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மூன்றாம் பாலின வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்கினை உறுதிசெய்திடும் வகையில் திருநங்கைகள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி அளவில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எளிதில் உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



