ஆறறிவு படைத்த மனிதர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படும் போது தாங்கள் படும் வேதனையை பிறரிடம் வாய்விட்டு சொல்லி தீர்வு காண முடிகிறது. ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகளால் அப்படி சொல்ல முடிவதில்லை.
அவற்றை விட ஓரறிவு கூடுதலாக பெற்றிருக்கும் மனிதர்களால் தான் அவற்றின் துன்பங்களை கண்டறிந்து போக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல உதாரணமாக சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு நிகழ்வை சொல்லலாம்.
மதுரை சர்வேயர் காலனியில் ஒரு காலில்லாத நிலையில் சுற்றி திரிந்த காளை மாட்டை பற்றி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்க ஆட்சியரும் கால்நடை துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு அந்த காளைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று காளை மாட்டை மீட்டு உரிய பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் காளை மாட்டிற்கு செயற்கை கால் பொருத்துவது என முடிவு எடுத்தனர். காளையின் கால் அளவை எடுத்து செயற்கை கால் தயாரிக்க கொடுத்தனர். இதற்கு மூன்று வாரங்கள் ஆயின.
சமீபத்தில் அந்த காளைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. தற்போது அந்த காளை நன்றாக நடக்கிறது. மருத்துவ துறை வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க சாதனை இது. உடல் ஊனமுற்ற மற்ற விலங்குகளுக்கும்,செயற்கை உறுப்புகள் பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கால்நடை மருத்துவர் வைரசாமி.
காளையின் கஷ்டத்தை உணர்ந்த மதுரை மக்களுக்கும், அதற்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கும், செயற்கை கால் பொருத்தி சாதனை படைத்த கால்நடை மருத்துவ குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நம் இல்லத்தில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கோ, அல்லது சாலையில் நம் கண் படும் விலங்குகளுக்கோ உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க கோரலாம்.
செயற்கை உபகரணங்களை பொருத்த முடியுமா என்று கேட்கலாம். அவ்வாறு செய்ய முடிந்தால் வாயில்லா ஜீவனுக்கு வாழ்வளித்த புண்ணியம் கிடைக்கும் என்பதுடன் நவீன மருத்துவ வசதிகளால் விலங்குகளுக்கும் மறுவாழ்வு கொடுக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தலாம்.



