திருப்பூரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எவரெடி கம்பெனி குழும நிர்வாக இயக்குநர் சுப்பிரமணி, ராயல் கிளாசிக் கம்பெனி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் பேசும்போது, தொழில் முனைவோர்களும், நலிவடைந்த மக்களும் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா விரைவாக சேவை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகை காசோலைகளை அவர் வழங்கினார்.
மேலும் பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் ஸ்வா நிதி, முத்ரா, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்க நிதி உதவி வழங்கும் திட்டம் மற்றும் சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதங்களையும் அவர் வழங்கினார்.
இதில் 20 வாடிக்கையாளர்களுக்கு 10 கோடி ரூபாய் கடன்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் வழங்கினார்.
பொது மேலாளர் எஸ்.அன்னபூர்ணா பேசுகையில், திருப்பூர் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு பயன்படும் வகையில் சிறந்த சேவை நோக்குடன் புதிய மண்டல அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது என்றும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எண்ணற்ற திட்டங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
முன்னதாக மண்டல மேலாளர் பி.எம்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அவர் பேசும்போது, திருப்பூரில் ஏற்றுமதி வணிகம் நன்றாக இருப்பதால் அதற்குக் கடன் வழங்குவதில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது என்றும், அனைத்து விதமான கடன்களையும், சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்று பயன் அடையுமாறும் கேட்டுக்கொண்டார்.
இறுதியில் துணை மண்டல மேலாளர் அறிவழகன் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.



