‘ஆட்டிசம் ஞாயிறு’ என்று ஆட்டிசம் குறைபாடு மற்றும் ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் உள்ள வர்கள் நலன் பெற வேண்டி சர்வ தேச பிரார்த்தனை தினமாக உலகம் முழுவதும் 2002-ம் ஆண்டு முதல், பிப்ரவரி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு, சேசுசபை அந்தோனி ராஜ் நினைவு பல்திறன் உயர் ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு கல்வி மையத்தில் (ஜெய்கேர்), அனுசரிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆட்டிசம் எனப்படும் மன இறுக்கத்தாலும் நரம்பியல் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டி, ஓவியப் போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பங்கு தந்தை ரெவரண்ட் எஸ். மரியநாதன், பால சிக்ஷா சாஹித்ய லட்சுமி வித்யா சங்கம் டிவிஎஸ் பள்ளி முதல்வர் டாக்டர் எஸ்.எஸ். சுந்தரவள்ளி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஆட்டிசம் நோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், இந்நோயைக் கண்டறிந்த விதம் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளைத் தேடி அலைந்து கண்டறிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆட்டிசம் பாதித்த வர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை முறைகளையும் விளக்கினர்.
குழந்தை நரம்பியல் மருத்துவரும், கென்மாக்ஸ் ஒருங்கிணைந்த சிறப்புப் பள்ளி நிறுவனருமான டாக்டர் கே.ராகவன் பேசியதாவது:
ஆட்டிசத்தை ஆரம்ப நிலையி லேயே கண்டறிந்து, உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம், அவர்கள் விரைவாக குணம டைந்து சிறப்பாக செயல்பட வழியேற்படும்.
குழந்தைகள் பிறந்து 6 மாத காலத்திலேயே அவர்களுக்கு இந்நோய் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித் துவிட முடியும்.
சில சமயங்களில் மிக குறைவான பாதிப்பு மற்றும் அறிகுறிகளால் ஆரம்ப நிலையிலேயே இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்க முடியாமலேயே நீண்ட காலத்துக்கு இருந்து விடக்கூடும்.
இதனால் குழந்தைகளின் நடவடிக்கைகளில் காணும் சிறிய மாறுதல்களைக்கூட பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே கண்காணித்து, மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு, 90 நாள்களுக்கு பீட்டா குளுகான் உணவு அளிப்பதனால் அவர்களது செயல்பாடுகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம் தெரிவதாக இது தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தூக்கம் சீரடைவது, கோபம், எரிச்சல் உள்ளிட்ட பண்புகள் குறைவது மட்டுமின்றி, பேச்சுத்திறனோடு மற்றவர்களுடனான உறவும் மேம்படுகிறது.
இத்துடன் பிளாஸ்மா ஆல்பா-சைனுகிளெய்ன் எனும் நரம்பியல் செயல்பாடு ஊக்கியும், அவர்களது குடல் நுண்ணுயிர்களும் சீரடைவதாக டாக்டர் ராகவன் குறிப்பிட்டார்.



