கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல்லை அரவை செய்து கிடங்கில் ஒப்படைக்க தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தரமான அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-21ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கி வருகிறது.
மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு, “ஒரு முறை திட்டத்தின்” கீழ் வருகிற 15ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை அரவை செய்து அரிசியினை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட ஏதுவாக, தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருநது விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்களது அரிசி ஆலைகளில் நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.



