நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, உயர்விளைச்சல் பெற் றிடும் வழிமுறைகளை, விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது: பொதுவாக இரவில் நிலவும் குளிர்ச்சி மற்றும் காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் ஆகியவற்றால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோயானது இளம்பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கு மேல் சேதம் விளைவிக்கும். இந்நோயினை பரப்பும் பாக்டீரியா பாசன நீர் மூலமாகவும், பாதிக்கப்பட்ட பயிரில் மேல் மழை நீர் பட்டு வழிந்தோடுவதாலும், பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது.
பரவும் சூழல்
காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல், மந்தமான தட்ப வெப்ப நிலை அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவுதல், காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன, இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும்.
நிழலான பகுதிகள் நெருக்கமாக பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.
இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி அடுத்தடுத்து இருக்கும் புள்ளிகளுடன் இணைந்து அளவில் பெரியதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிக் காய்ந்து பின்பு உதிர்ந்து விடும்.
வளர்ந்த பயிர்களில் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்துடன் நீரில் நனைந்த கீற்றுக்களாக மாறத் தொடங்கி, பின்பு அளவில் பெரிதாகி வைக் கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும்.
தாக்குதல் அதி கமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.அடித்தாள்கள், வைக்கோல் மற்றும் நெற்கழிவுகளில் இந்த பாக்டீரியாவானது நெடுங்காலம் உயிர் வாழும் தன்மை கொண்டதால் அவற்றை அழித்து விட வேண்டும்.
அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும். எனவே, அந்த களைகளை முற்றாக அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினைப் பறித்து அழித்து விட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு இந்நோய் பரவாது.
நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
தாக்குதல் அதிகமாகக் காணப்படின் காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்துள்ளார்.



