fbpx
Homeபிற செய்திகள்துணிப் பையை கையில் எடுப்போம்!

துணிப் பையை கையில் எடுப்போம்!

உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு பூமியில் சீர்கேடுகளும் வளர்கின்றன. அந்த வகையில் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு அதிமுக்கிய காரணம் நெகிழி என்கிற பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரிப்பு தான்.

பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்த மிக எளிதாக இருந்தாலும் அதனால் விளையும் தீமைகள் ஏராளம். நீர் நிலைகளை மாசுபடுத்துகிறது, அதில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, மக்காமல் இருந்து மண்ணின் வளத்தை சிதைக்கிறது, வறட்சியை ஏற்படுத்துகிறது, மனித உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது… இப்படி பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பிளாஸ்டிக் கவர்கள் பல நூறு ஆண்டுகள் வரை கூட மக்காமல் கிடக்குமாம். அதனால் தான் அதனை மக்காத குப்பை என தரம் பிரித்துள்ளோம்.
சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதனை மீறி பயன்படுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கை, கொரோனா காலகட்டத்தில் குறைந்துபோனதால் தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போது கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ‘மீண்டும் மஞ்சள் பை’ பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்து அதனை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளார்.

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் வழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடைக்கு செல்லும் போது பாலித்தீன் கவருக்கு பதிலாக ஒரு துணிப்பையை எடுத்துச் சென்று பயன்படுத்த நம்மால் முடியாதா?. முடியும்; எல்லோராலும் இதனைச் செய்ய முடியும். அதேநேரத்தில் அதனை தினசரிப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பூமி நம்முடைய தாய் போன்றது அதனை பாதுகாத்து வளமையாக்குவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். நம் நாட்டில் ஏராளமான நன்மை தரும் இயற்கை பொருட்கள் கிடைக்கின்றன.

அவற்றை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்துவோம். தமிழக அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்.

துணிப்பையை கையில் எடுப்போம்!

படிக்க வேண்டும்

spot_img