சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பகிமா என்ற பெண்ணுக்கு சிறந்த மனிதநேயப் பணிக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப் அவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தேசிய தன்னார்வ மற்றும் தொண்டு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து விருது பெற்ற பகிமா கூறுகையில், விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன, மத வேறுபாட்டை களைந்து அனைத்து மக்களிடமும் நல்லிணக்கம் தொடர்ந்து நிலைத்திட பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.



