fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தில் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழை 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழை 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்த பகுதி கார ணமாகவும் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில், குமரிக் கடல், இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரும். அதன்பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 2) டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியா குமரி மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 3: மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 4: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மன்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதி களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, பெரம் பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ஒருநாள் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, கன மழை காரணமாக கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென் னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கேரள கடலோரம், லட்சத்தீவு,மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். அதனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் நேற்றிரவு பலத்தமழை பெய்தது. 2 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் காந்திபுரம், ரயில்நிலையம், அரசு மருத்துவமனை பஸ்நிறுத்தம், லட்சுமி மில்ஸ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இயல்பை காட்டிலும் 110 சதவீதம் கூடுதல் மழை பொழிவு கிடைத்துள்ளது. தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக இந்த பருவத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 168 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 353.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 110 சதவீதம் அதிகமாகும்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:

அன்னூர் 4 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் 29.1 மில்லி மீட்டர், சின்கோனா 3 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் 19 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட பகுதிகள் 6 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா 5 மில்லி மீட்டர், சோலையார் 10 மில்லி மீட்டர், ஆழியார் 11 மில்லி மீட்டர், பொள்ளாச்சி 35 மில்லி மீட்டர், கோவை தெற்கு 52 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சுற்றுவட்டார பகுதிகளில் 51 மில்லிமீட்டர், கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் 26 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் 14.20 மில்லி மீட்டர் என மொத்தம் 300.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் சராசரியாக நேற்று 21.45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி
சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த மழை காரணமாக பழமை வாய்ந்த மரம் சற்று முன் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்துள்ளார். 2 கார்கள் சேதம் அடைந்துள்ளன. இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

சற்று நேரம் வரை தங்களுடன் பேசிக் கொண்டிருந்த பெண் காலவர் திடீரென மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,.

சுவர் இடிந்து விழுந்து பாட்டியுடன் வாலிபர் பலி

இடி தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில், திருமணம் நிச்சயமான வாலிபரும், அவரது பாட்டியும் உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன், 68, என்பவரது வீட்டின் மீது நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் இடி விழுந்துள்ளது.

இதில், அவரது மாடியில் இருந்த நீர்த்தேக்க தொட்டியின் சுவர் இடிந்து, அருகேயுள்ள ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. வீட்டினுள் தூங்கிய லட்சுமி, (85), அவரது பேரன் அஜித்குமார் (25) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அஜித்குமாருக்கு இன்னும் 15 நாட்களில் திருமணம் நடத்த, நிச்சயிக்கப்பட்டு இருந்தது

படிக்க வேண்டும்

spot_img